ஒரு மாதத்திற்கும் மேலாக வந்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற நிலையில் ஓரிரு நாட்களில் உடன்பாடு எட்டப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள்
சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதமும், பல்லடம் ரகத்திற்கு 20 சதவீத கூலி உயர்வு கேட்டு நீண்டை நாட்களாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். தொடர்ந்து, ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து கடந்த 39 நாளாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் மற்ற ரகங்களுக்கு 19 சதவீதமும், பல்லடம் ரகத்திற்கு 15 சதவீத கூலி உயர்வு செய்வது என முடிவு எட்டப்பட்டது.
தொடர்ந்து, 9 சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் 8 சங்கங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். சோமனூர் சங்கம் கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.









