அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் எனவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளும், மருந்து மாத்திரைகளும் எடுத்துக் கொண்டார் எனவும், அவருக்கு கட்டாயமாக விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அமலாக்கத்துறை சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை. செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.







