இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 5-ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது.
பிரிஜ் பூஷன் சரண் சிங்கை உடனடியாக கைது வேண்டும் என வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனை மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை தரதரவென்று இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த வழக்கில் ஜூன் 15ஆம்தேதி குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும், ஜூன் 30ஆம்தேதிக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவி தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் 354, 354D, 354A & 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இதனிடையே மைனர் பெண் புகார் தொடர்பான போக்சோ குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்வதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். விசாரணையில் எந்த உறுதிப்படுத்தப்படாத ஆதாரம் கிடைக்காததால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







