அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை வரும் 11-தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை வரும் 11-தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை நீதிபதிகள் இருவரும் தீர்ப்பு வழங்கினார்கள். 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

அதில் நீதிபதி நிஷா பானு, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். அதே போல் இந்த வழக்கு நேற்று பிற்பகல் நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கு மீதான விசாரணை இன்று 3-வது நீதிபதி  கார்த்திகேயன் முன் நடைபெற்றது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை காவல் காலமாக கருத முடியாது என அமலாக்கத்துறை கோரியிருந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பிலும், செந்தில் பாலாஜி மனைவி சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 11ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை தொடங்கப்படும் எனவும் வழக்கு விசாரணை 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் கூறிய நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரணையை அன்றைக்கு ஒத்தி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.