அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டிய நிலையில் இன்று மாலை நீதிபதி அல்லி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் எந்த வாதங்கள் நடைபெறவில்லை. நீதிமன்றத்தில் வாதங்கள் வைத்துக் கொள்ளலாம் என நீதிபதி அல்லி தெரிவித்தார். மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் உடல்நிலை குறித்து தான் விசாரித்து வருகிறோம் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்தார்.
இந்த நிலையில் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன்பிறகு அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற அமர்வு அறிவித்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
“ விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்ய தவறும் பட்சத்தில் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் விசாரணைக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை.
வருமான வரிகணக்கிற்கு முரண்பாடாக செந்தில் பாலாஜியின் கணக்கில் பணம் இருந்தது. அதன்படி செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் ரூ.1.34 கோடி இருந்தது. செந்தில் பாலாஜியின் மனைவி வங்கி கணக்கில் ரூ.29.55 லட்சமும் இருந்தது. இப்பணம் செந்தில் பாலாஜி வருமான வரிகணக்கிற்கு முரண்பாடாக இருந்தது
செந்தில் பாலாஜியை இன்று (ஜூன் 14) அதிகாலை 1.39 மணிக்கு தான் கைது செய்தோம்; சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கான ஆதாரமும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தராததுமே கைதுக்கு காரணம். அதேபோல அவரது சகோதரர் அசோக்குமார், சண்முகம் ஆகியோருக்கும் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை அதனால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அமலாக்கத்துறை அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







