அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி பண மோசடி, வெளிநாட்டில் சட்டவிரோத பணபரிவர்த்தனை உள்ளிட்டவை குறித்து குறித்து கடந்த 2 நாட்களாக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
3-வது நாளான இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். ஏற்கனவே செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக் குமாரின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரில் கரூரில் சிட்டி யூனியன் வங்கியில் 4 கணக்குகளும், சென்னை தலைமைச் செயலக கிளை இந்தியன் வங்கியில் ஒரு கணக்கும் வைத்துள்ளார். அது குறித்த ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளனர்.
மேலும் செந்தில் பாலாஜி தனிநபர் கடனாக 15 பேருக்கு பணம் கொடுத்துள்ளது தொடர்பான ஆவணங்களும் அமலாக்கத்துறையிடம் உள்ளது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா பெயரில் கரூர் சிட்டி யூனியன் வங்கியில் 2 கணக்குகள், மண்மங்கலம் கிளை இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு கணக்கு உள்ளது. இது தொடர்பான ஆவணங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளனர். மேகலா தனிநபர் கடனாக 18 பேருக்கு பணம் கொடுத்த ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கணக்குகளில் ரூ.1.34 கோடியும், அவரது மனைவி மேகலாவின் ரூ. 29.55 லட்சமும் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டிருப்பது மோசடி பணம் என அமலாக்கத்துறை ஏற்கனவே கூறி வருகிறது.
வங்கி கணக்கு ஆவணங்கள், மனைவி மேகலாவின் வங்கி கணக்கு ஆவணங்கள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம்விசாரணை நடந்தி வருவதாக கூறப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் ஒய்வு அளிக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.







