தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மானியம் வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 3,987 பேருக்கு மானியத் தொகைக்கான காசோலைகள் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகம்மது நசிமுதீன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறுபான்மை நல இயக்குநர் மு.ஆசியா மரியம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்குச் சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டு பயணிகள் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர்.
அதன்படி, ஹஜ் பயணிகளில் 5 பேருக்கு தலா ரூ.25,070 தொகைக்கான காசோலைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகம் முழுவதும் ஹஜ் பயணம் மேற்கொண்ட 3,987 பேருக்கு தலா ரூ.25,070 மானிய தொகைக்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளன.
முதன்முறையாக ஹஜ் யாத்திரை செல்வோருக்குத் தமிழக அரசு மானிய தொகை வழங்குகிறது.







