சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதின் காரணமாகவே, மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ்டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தற்போது வெளியிட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்த அவர், மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்து, அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதலமைச்சருடன் வரும் 23ஆம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, பிளஸ்டூ பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட அரசு திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார். இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதால், ஏற்கனவே தயாராக வைத்திருந்த பிளஸ்டூ தேர்வு அட்டவணையை மாநில அரசு வெளியிட்டதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.







