இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் ஏழாவது மலையில் காட்சி அளிக்கிறார். அவரை தரிசிக்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜனவரி முதல் வாரத்தில் இருந்து மே இறுதி வாரம் வரை பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெள்ளிங்கிரி மலை ஏற வனத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து வனத் துறை சார்பில் மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீண்டும் பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அடிவாரப் பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மை ஆகியோரை வணங்கி ஆய்வு மேற்கொண்டு மலை ஏறத் துவங்கினார். இவருடன் பாதுகாப்பிற்காக வனத் துறை ஊழியர்கள், அறநிலையத் துறை ஊழியர்கள் சிலர் உடன் சென்றனர்.
கடந்த 4 நாட்களாக மேற்கு மலைத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு அதிகமாக உள்ளது. இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் கோயிலின் தேவைகள் குறித்தும், பக்தர்களின் வசதிகள் குறித்தும், தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வரும் அடிப்படை தேவைகள் குறித்தும், அன்னதானக் கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, பக்தர்கள் தங்கும் கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் போன்றவை குறித்தும் பக்தர்கள் மற்றும் அலுவலரிடம் கேட்டறிந்தார். பின்னர், வெள்ளிங்கிரி மலைக்கு நடைபயணமாகச் சென்று மலைப் பாதைகளைப் பார்வையிட்டு வருகிறார்.