பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரான சிறுநீரக சிறப்பு அரசு மருத்துவர் தியாகராஜன் உடல்நல குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தியாகராஜன் அவர்களது உடல் விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 7 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும், நேரில் அஞ்சலி செலுத்தினர் . மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் ராமதாஸ் அமைச்சர் பொன்முடியின் தம்பி தியாகராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது..
”தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் காலமானதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மருத்துவர் தியாகராஜன் சிறந்த மருத்துவர். பழகுவதற்கு நல்ல மனிதர். பணத்தை பெரிதாக மதிக்காமல் மருத்துவத்தை சேவையாக செய்து வந்தவர். மருத்துவர் தியாகராஜனை இழந்து வாடும் அமைச்சர் பொன்முடி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.







