அமைச்சர் பொன்முடி இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இரவு 8 மணிக்கு வரை சோதனை நடைபெற்ற நிலையில், நான்கு பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கதுறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். இதேபோல் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, கயல் பொன்னி ஏஜென்சி, சூரியா பொறியியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன-
பின்னர் பொன்முடியை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவரது காரிலேயே அழைத்து சென்றனர். இந்த விசாரணை நள்ளிரவு சுமார் 3 மணி வரை நீடித்தது. பின்னர் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். . இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடியின் வழக்கறிஞர் சரவணன், இன்று மாலை 4 மணிக்கு பொன்முடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.





