சதுரகிரியில் 2 வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 2 வது நாளாக மலைப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலில், சித்தர்கள் எந்நேரமும் வழிபட்டு வருவதாக ஐதீகம் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என்று எட்டு நாட்கள் மட்டுமே, தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
அந்த வகையில், நேற்று ஆடி பிறப்பு அமாவாசை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில், மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் நாவல் ஊத்து பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இதில், பக்தர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப் பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. மேலும் தீயை அணைக்க 30 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மலை பகுதிக்கு சென்றுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் மலைப் பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்ட 4 வது நாளான இன்று சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.







