இலவச பேருந்தில் ஓசி பயணம் என அமைச்சர் பொன்முடி பேசியது, தலைமை வரை அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் பாராட்டு விழா நடைபெற்றது. வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, ஓசி என பேசியதற்கு மேடையில் வருத்தம் தெரிவித்தார். சகஜமாக பேசிய வார்த்தையை வைத்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். உண்மையில் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்றார்.
வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருக்கிறது என்ற அவர், மு.க.ஸ்டாலின் தன்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் ஆட்சியில் வேறு எதை வைத்தும் அரசியல் செய்ய முடியாது என்பதால், ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு அரசியல் செய்வதாக குறிப்பிட்டார்.








