இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இந்தாண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள மிக முக்கிய பேச்சுவார்த்தை கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் தாம் பங்கேற்க உள்ளதாக மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாட்டில், இந்தியா – மேற்கு ஆஸ்திரேலியா இடையே 25 ஆண்டுகள் உள்ள நட்புறவைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு
சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேடையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் மூலதனத்தை தற்போதைய அரசு அதிகரித்து வருகிறது. தற்போது பணவீக்கம் உள்ளது. ஆனால் அது பெரிய பாதிப்பை மாநிலத்தில் ஏற்படுத்தாது. இந்தியாவிற்கு அதிக அளவில் பொருளாதார பங்களிப்பு தமிழ்நாடு செய்து வருகிறது. பழமையான தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது தான் தமிழர்களின் கொள்கை. அதன் வெளிப்பாடாகவே உலகின் பல்வேறு
சர்வதேச நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கின்றனர்.
வரும் செப்டம்பர் மாதம் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே டெல்லியில் மிக முக்கிய
சந்திப்பு நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்க தாம்
அழைகப்பட்டுள்ளேன். சர்வதேச அளவில் இந்தியா கையெழுத்திடும் ஒப்பந்தங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவில் குறைவாக உள்ள
முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா








