விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாக அறிக்கைவிடும் போலி விவசாயி, கல்லாப்பெட்டி சிங்காரம் என்று எடப்பாடி பழனிசாமியை வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து, வேளாண்மை – உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்கட்சித் தலைவர் அறிக்கையில் உள்ளது போல கர்நாடக அக்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சில்லறை விலையை விட தமிழகத்தில் அதிகமாக விலை உள்ளது என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தவறான செய்தியாகும். உரத்தின் விலையானது ஒன்றிய அரசால் மட்டுமே இந்தியா முழுமைக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. நான்கு வருடம் முதலமைச்சராக இருந்த போலி விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளாக சீர்கெட்ட நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வர கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நெல்தரிசில் பயறு வகைகள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம், தோட்டக்கலை முதன்மை மாவட்டங்கள் மற்றும் e-NAM, டெல்டா மாவட்டங்களில் உலர் களங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களை காவல் துறை மூலம் விவசாயிகளை அடக்கி புறந்தள்ளி ஆட்சி நடத்தியவர்தான் கல்லாப் பெட்டி சிங்காரம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தற்போது விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாக அறிக்கைவிடும் போலி விவசாயி, விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதை யாரும் நம்பப்போவது இல்லை.
இத்தகைய உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிடுவதை இனிவரும் காலங்களிலாவது தவிர்த்து பொறுப்பான எதிர்கட்சித் தலைவராக இனியாவது நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








