இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ட்ரீம் ரன்னர்ஸ் சார்பாக நடத்தப்பட்ட 21.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். ஆல்காட் பள்ளி தொடங்கி, பெசன்ட் நகர், சாந்தோம் வழியாக மெரினா, தலைமைச் செயலகம் நிறைவாக மீண்டும் மெரினா காந்தி சிலை வரை ஓடி, மாராத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார்.
இதன் மூலம், அவர் 131 வது மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்று சாதனை செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், இளைஞர்களுக்கு முன் மாதிரி யாக, யோகா, மூச்சுப்பயிற்சி, நடை பயிற்சி, போன்றவற்றை செய்ய, வயது தடை இல்லை என நிரூபித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதே தமது இலக்கு என்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தொடர்ந்து மாரத்தானில் பங்கேற்கிறேன் என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.







