தமிழகத்தில் டெல்டா பிளஸ் நோய் தாக்கத்தை ஆராய்வதற்காக ரூபாய் இரண்டரை கோடி மதிப்பீட்டில் சென்னையில் பகுப்பாய்வு கூடம் அமைக்கும் பணிகள் இன்னும் இருபது நாட்களில் தொடங்கப்படவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தின் 116-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராயா சாலையில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ,செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசுகையில், “தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருவதால் பொது நோய் சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து அரசு மருத்துவமனை முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே மாத மத்தியில் கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்த நிலையில்தான் டெல்டா பிளஸ் நோய் தாக்கம் ஏற்பட்டது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் டெல்டா பிளஸ் நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் வீடுகள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் அவரது உடலை ஆய்வு செய்ததில் அவருக்கு டெல்டா நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் நோய் தாக்கம் தான் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துவருகிறார்கள்.
அதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா பிளஸ் நோய் தாக்கத்தை ஆராய்வதற்கான பகுப்பாய்வு கூடத்தை அமைக்கும் யோசனையை தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார ஆராய்ச்சி மையமான ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டில் நாட்டில் மொத்தம் 14 பரிசோதனை கூடங்கள் உள்ளது. ஆனால்இந்தியாவிலேயே வேறு எந்த ஒரு மாநிலத்திலும் தனியாக டெல்டா பிளஸ் நோய் தாக்கத்தை ஆராய்வதற்கான ஆய்வுக் கூடம் அமைக்கப்பட வில்லை.
இந்நிலையில் நாட்டில் முதன் முறையாக தமிழகத்தில்தான் கொரோனா நோய்த் தொற்றை பகுப்பாய்வு செய்ய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை மையமாக கொண்டு ரூபாய் இரண்டரை கோடி மதிப்பீட்டில் பகுப்பாய்வு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் 20, 25 நாட்களில் தொடங்கப்படவுள்ளது.
ஆய்வு மையம் அமைப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோய் பாதிப்பிற்கு பிறகு நோயாளிகளை கண்காணிக்கும் மையத்தை அமைக்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டமன்ற உரையில் அறிவித்திருந்தார். அந்தவகையில் கிங் இன்ஸ்டியூட்டில் மிகப்பெரிய (Post Covid Centre)சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
மத்திய சுகாதார துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கு டெல்டா பிளஸ் நோய் தாக்கத்தை கண்காணிக்க வேண்டும், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா பிளஸ் நோய் தாக்கத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றோம் அது குறித்து பொதுமக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.
மூன்றாம் அலை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது 2ம் அலையின் போது 80 ஆயிரம் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஏற்கனவே ஒரு லட்சம் படுக்கை வசதிகள் இருக்கின்றன. முதல் அலையின் போது அமைக்கப்பட்ட படுக்கைகள் அனைத்தும் எடுத்துவிட்ட காரணத்தால்தான் 2-ம் அலையை சமாளிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டதாகவும் அந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக மூன்றாம் அலையை சமாளிக்க தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் அடுத்த ஆறு மாதத்திற்கு தொடரும்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்துவரும் காரணத்தால் கருப்பு பூஞ்சை தாக்கமும் குறைந்து வருவதாகவும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தாக்கம் முழுமையாக இல்லாத நிலை ஏற்படும் என தமிழ் நாடு முதலமைச்சருக்கு மருத்துவ நிபுணர்கள் அறிக்கை வழங்கி இருப்பதாக” அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.







