திருவாரூரில் இந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிகழ்ச்சி மூலம் மனு அளித்தவர் களுக்கு தனியார் நிறுவனத்திற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் கணேசன் கூறியதாவது: தேர்தல் நேரத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு 100 நாட்களில் நிறைவேற்றித் தருவேன் என முதல்வர் அறிவித்தார். அதனடிப்படையில் இதுவரை 50% மக்களுக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி இன்று வேலைவாய்ப்பு துறை மூலமாக பணி ஆணை வழங்குகிறோம்.
விரைவில் திறன் மேம்பாட்டுத் துறையின் மூலமாக முதலமைச்சரின் வழிகாட்டு தலின்படி பல லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய நிலையை உருவாக்குவோம். தமிழக முதல்வரின் அனுமதி பெற்று இந்த ஆண்டு திருவாரூரில் கருணாநிதியின் பெயரில் தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கணேசன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் கட்டப்பட்டுள்ள ஊர் காவல் படை அலுவலக கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவராவ், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.








