தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக மீது அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக சார்பில் போட்டியிடுகிறார். இரு கட்சிகளும் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், “கரூரில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தபோது எங்களை பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் பிடித்து விசாரித்தோம். அவர்கள் மட்டுமல்லாமல் மேலும் நான்கு நபர்கள் எங்களை பின் தொடர்ந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் திமுகவினர், திமுக தலைமையுடன் நெருக்கமாக இருப்பவர்கள்” என்று குற்றம்சாட்டினார்.
தன்னை பின் தொடர்ந்து வர காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பிய அவர், திமுக வேட்பாளர் தூண்டுதல் பேரில் என்னை பின் தொடர்ந்து வந்து உள்ளனர். திமுக வேட்பாளர் தோல்வி பயத்தலால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றார்.
மேலும், வெளியூர் ஆட்களை வைத்துக் கொண்டு கரூரில் திமுகவினர் கலவரத்தில் ஈடுபடுவதாகவும் கூறிய அவர், “என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். எனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் காவல்துறையும்,தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு. இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.







