கோலிவுட்டில் இந்த வாரம் ஜி.வி.பிரகாஷ் நடித்த ஹேப்பிராஜ், புதுமுகங்கள் நடித்த நீ பார்எவர், திகில் படமான சாத்தான் தி டார்க் மற்றும் ஓடிடியில் விஜய்சேதுபதி நடித்த முத்து என்கிற காட்டான்(வெப்சீரீஸ்) ஆகியவை வெளியாகி உள்ளது. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக……..!
ஹாப்பிராஜ்
மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகவுரிபிரியா, ஜார்ஜ் மரியான், அப்பாஸ், கீதாகைலாசம், மதுரை முத்து உட்பட பலர் நடித்த அப்பா சென்டிமென்ட் படம் தான் இந்த ’ஹாப்பி ராஜ்’. பெங்களூருக்கு ஐடி வேலைக்காக சென்ற இடத்தில், தொழிலதிபர் மகளான ஸ்ரீகௌரி பிரியாவை காதலிக்கிறார், பொள்ளாச்சியை சேர்ந்த வாத்தியார் மகனான ஜி.வி.பிரகாஷ். காதல் கை கூடி, கல்யாணத்தில் முடிகிற நேரத்தில் சிக்கல், ஈகோ பிரச்னை. ‘‘உன் அப்பா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று ஜி.வி.பிரகாஷிடம் அடம்பிடிக்கிறார் ஸ்ரீகௌரி பிரியாவின் தந்தையான அப்பாஸ். ‘‘ உன் வருங்கால மாமனார் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் திருமணம்’’ என்கிறார் ஜார்ஜ் மரியான். இந்த ஈகோ பிரச்னையை தீர்க்க காதலர்கள் போராடுகிறார்கள். யார், யாரிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகௌரி பிரியா திருமணம் நடந்ததா என்பதுதான் படத்தின் கதை. காதல் மற்றும் காமெடி படம் என்று மட்டும் இல்லாமல் அப்பா சென்டிமென்ட் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அதுவே இப்படத்தை வித்தியாசப்படுத்தி, பெரிதும் ரசிக்க வைக்கிறது.
உருவ கேலி செய்யப்படுகிறார் ஜார்ஜ் மரியான். இந்த கிண்டல் ஜி.வி.பிரகாஷ் காதலையும் பாதிக்கிறது. பெங்களூருக்கு போய் காதலில் விழுந்தபின்னரும் அப்பாவின் உருவத்தோற்றம், அவர் இமேஜ் காதலை பாதிக்க, ஜி.வி.பிரகாஷ் என்ன செய்கிறார் என்ற ரீதியில் கதை செல்கிறார். அடிக்கடி காதலில் தோற்கிற அப்பாவி இளைஞர் வேடம் அவருக்கு செட்டாகி இருக்கிறது. காதல், டான்ஸ் காட்சிகளில் கலக்குகிறார். அப்பா சென்டிமென்ட் காட்சியில் இன்னும் நன்றாக நடித்து இருக்கலாம்.
ஹீரோயின் ஸ்ரீகௌரி பிரியா பாடல், காதல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குபின் நடித்து இருக்கிறார் அப்பாஸ். கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய இடங்களில் அவர் நடிப்பு நச். என்ன, அவரை பல இடங்களில் கோட் சூட் போட்டு சும்மாவே வைத்து இருக்கிறார் இயக்குனர். ஜி.வி.பிரகாஷ் அம்மாவாக வரும் கீதா கைலாசம் ஹோம்லி, மார்டன் என இரண்டிலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். ஹீரோயின் டீமுடன் அவர் பெங்களூரில் மலமல பாடலுக்கு ஆடுவது அசத்தல்.
படத்தில் மற்றவர்களை விட நடிப்பில் கலக்கி, கை தட்டல் வாங்குவது அப்பாவாக வரும் ஜார்ஜ் மரியான்தான். அவரின் காமெடி கலந்த சீரியஸ் நடிப்பு, மகனுக்காக சண்டை, பாசம் ஆகியவை படத்தின் பிளஸ். தான் ஏன் இப்படி இருக்கிறேன். தனது பிளாஷ்பேக் இப்படி என ஜார்ஜ் மரியான் சொல்வது உருக்கம். குறிப்பாக,கிளைமாக்சில் அவர் நடிப்பும், அவர் சொல்கிற விஷயமும் சூப்பர். அவரை பார்க்கிற பலருக்கு தங்கள் அப்பா, அவரின் தியாகம், அவரின் பாசம் நினைவுக்கு வரும். அவர் நடிப்பை பார்த்து பலர் தங்கள் அப்பாவை நினைத்து அழுவது உறுதி. அவருக்கு விருதுகள் கிடைக்கும்.
ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் ஓகே. முதற்பாதியை விட, இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு அதிகம். இன்னும் கொஞ்சம் காமெடி, பாடல், விறுவிறுப்பு இருந்து இருக்கலாம். கிளைமாக்சில் வரும் ரயில் பிளாஷ்பேக் காட்சிகள் சினிமாதனம். ஆனாலும், இளைஞர்களுக்கு காதல் காட்சிகள் பிடிக்கும். மற்றவர்கள் ஈகோ, பாசக்காட்சிகளை ரசிப்பார்கள். உருவக்கேலி, பொருளாதார, ஈகோ பிரச்னையால் அவமானப்படும், கஷ்டப்படும் பாசக்கார அப்பாக்களுக்கு ஹாப்பிராஜ் சமர்ப்பணம்
நீ பார்எவர்
அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், வித்யா, விஜேபப்பு உட்பட பலர் நடித்த காதல் கலந்த பாசக்கதைதான் இந்த ‘நீ பார்எவர்’. ஒரு டேட்டிங் ஆப் முயற்சியில் இருக்கும் ஹீரோவும், சினிமாவில் இயக்குனர் ஆக துடிக்கும் ஹீரோயினும் காதலிக்கிறார்கள். இருவருமே தங்கள் சுயநலத்துக்காக காதலிப்பது மாதிரி நடிக்கிறார்கள். ஒரு கட்டத்தல் இந்த உண்மை மற்றவருக்கு தெரிய வர, அப்போது இருவருக்கும் நிஜ காதல் வர, என்ன நடக்கிறது. இந்த காதல் ஜெயித்ததா? காதலர்கள் பிரிந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
புதுமுகங்கள் நடித்திருந்தாலும் கதையும், காட்சியமைப்பும், காதல் காட்சிகளும், சொல்லக்கூடிய விஷயங்களும் பிரஷ் ஆக இருக்கிறது. பொள்ளாச்சி, சென்னை காட்சிகளில் ஹீரோ அழுத்தமான நடிப்பை தந்து இருக்கிறார். பாடல் காட்சிகளில் செம ஆட்டம் ஆடியிருக்கிறார் ஹீரோ சுதர்சன். காதல் வலி உணர்ந்து அவர் தவிக்கிற இடம் அருமை. படத்தின் பெரிய பிளஸ் ஹீரோயின் அர்ச்சனா ரவி கேரக்டர், அவரின் துறுதுறு நடிப்பு. பல சீன்களில் அழகாக இருக்கிறார். அவர் ப்ரண்ட்டாக வரும் சினேகா சக்தியும் எனர்ஜி கேரக்டர். அதேபோல், ஹீரோ நண்பராக வரும் விஜே பப்பு கலகலப்பு ஊட்டியிருக்கிறார். இசையும், ஒளிப்பதிவும் சிறப்பு.
பழமைவாத, காதலை எதிர்க்கும் தாத்தாவாக வருகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். அவரின் விடாப்பிடி குணம் கொஞ்சம் சினிமாதனம். ஹீரோ அம்மாவாக வரும் வித்யா, கௌரவ வேடத்தில் வரும் நிழல்கள் ரவி மனதில் நிற்கிறார்கள். இவர்களை தவிர பாடகர் ஸ்ரீராம் கேரக்டர், அவர் பின்னணியும் ஈர்க்கிறது. டேட்டிங் ஆப் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எளிமை இருந்து இருக்கலாம். டயலாக்கை குறைத்து இன்னும் விஷூவலாக எடுத்து இருக்கலாம். ஆனாலும் படத்தில் ஒரு வித கலர்புல், யூத்னஸ் இருப்பது ரசிக்க முடிகிறது. கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது என்றாலும் போராடிக்கவில்லை. காதலை ரசிப்பவர்களுக்கு கதை பிடிக்கும்.
சாத்தான் ; தி டார்க்
மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் இந்த சாத்தான் ; தி டார்க். இறை நம்பிக்கை மிகுந்த அஸ்தினாபுரம் என்ற மலை கிராமத்தில் சாத்தானை வழிபடும் ஆட்களும் இருக்கிறார்கள். அவர்களால் கிராம மக்களுக்கு பிரச்னை. சில உயிர் பலிகளும் நடக்கின்றன. சாத்தானை வழிபடுபவர்கள் யார்? என்ன காரணம்? அவர்களின் நோக்கம் என்ன? அதிலிருந்து கிராம மக்கள் தப்பித்தார்களா என்பது இப்படத்தின் கதை.
கொஞ்சம் மாறுபட்ட, வித்தியாசமான திகில் கலந்த திரில்லர் கதை. ஹீரோயின் ஐராவின் அம்மா மோனா. சாத்தானை வழிபடும் கூட்டத்தை சேர்ந்த இவர் திடீரென மனநலம் மாறி தன்னையே காயப்படுத்துகிறார். நாக்கை அறுக்கிறார், கண்ணை தோண்டுகிறார். அவரால் தங்கையுடன் கஷ்டப்படுகிறார் ஐரா. அப்போது ஊரில் பாதிரியார் உட்பட சில கொல்லப்பட, இன்ஸ்பெக்டர் எட்வர்டு அது பற்றி விசாரிக்கிறார். அப்போது சாத்தான் வழிபாட்டுக்கு மாறிய சாந்தினி என்பவரின் பின்னணி தெரிய வருகிறது. அதிலிருந்து கிராமத்தில் கொலைகள் நடப்பதை அறிகிறார். ஹீரோ எப்.ஜேயுடன் இணைந்து கிராம மக்கள் என்ன செய்கிறார்கள். ஐரா மற்றும் அவர் அம்மா மோனாவுக்கு என்ன ஆனது என்றரீதியில் கதை செல்கிறது
படத்தின் காட்சிஅமைப்பு, சவுண்டு, திகில் காட்சிகள் உண்மையில் பயத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக அம்மாவாக வரும் மோனா நடிப்பு, அந்த வீட்டில் நடக்கும் விஷயங்கள் புல்லரிக்க வைக்கிறது. அந்த குடும்பத்தில் தவிக்கும் மகளாக, தானே ஒரு கட்டத்தில் வேறு மாதிரி மாறுபவராக ஐராவும் தேர்ந்த நடிப்பை தந்து இருக்கிறார். கடவுளை நம்பும் சாந்தினி சாத்தான் பக்கம் போனது ஏன் என்ற பிளாஷ்பேக், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், கொலைகள் பற்றி துப்பறியும் எட்வர்டு நடிப்பும் ஓகே. பாதிரியார், மதர், ஊர் மக்கள், சாத்தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அழுத்தம். பாலா ஒளிப்பதிவும், அஷ்வின் இசையும் கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறது. கொலைகள் நடப்பது, அதில் உள்ள குறியீடு, சாத்தான் நரபலி ஆகியவை ஹாலிவுட் படம் மாதிரி இருக்கிறது. சில சமயம் ஒலி அதிகமாக இருப்பதும், சில காட்சிகள் மீண்டும், மீண்டும் வருவதும் மைனஸ். முதற்பாதியில் வேகமாக நகரும் கதை, அடுத்து தடுமாறுகிறது. கிளைமாக்சில் முடிவை சொல்லாமல் அடுத்த பாகத்தில் பாருங்கள் என்று சொன்னது ஏமாற்றம்.
முத்து என்கிற காட்டான் (வெப்சீரிஸ்)
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் தான் இந்த முத்து என்கிற காட்டான். காக்கா முட்டை மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ் 10 எப்பிசோட்களை கொண்டுள்ளது. ஹீரோவான விஜய்சேதுபதியின் தலை மட்டும் கிடைக்கும் நிலையில், போலீஸ்காரர்களான முத்துகுமார், சிங்கம்புலி, வடிவேல் முருகன் ஆகியோர், அந்த கொலை குறித்து மதுரை, புதுக்கோட்டை, கேரளா ஆகிய இடங்களி்ல் விசாரிக்கிறார்கள். அப்போது விஜய்சேதுபதியின் பெயர் முத்து என்கிற காட்டான். அவர் ஒரு வாட்ச் மெக்கானிக், யானை பாகன், ஒரு சேவை மைய காப்பாளர், ஒரு பெரிய மனிதரின் அடியாள், ஆட்டு புழுக்கை விற்பவர், ஒரு டான்ஸ் குரூப் பாடிகார்டு என பல காலகட்டங்களில் பணியாற்றியதை கண்டுபிடிக்கிறார்கள். உண்மையில் விஜய்சேதுபதி யார்? அவர் இந்த தொழில்களை செய்தது ஏன்? அவரை கொலை செய்தது யார் என்றரீதியில் கதை நடக்கிறது.
விஜய்சேதுபதி நடிப்பு, அவரின் கேரக்டர், அவர் செய்யும் தொழில்கள் ஆகியவை இந்த வெப்சீரிஸின் பலம். ரொம்பவே அலட்டாமல், அமைதியாக ரசிகர்களை கவர்கிறார். குறிப்பாக, ஒரு ஓட்டல் சர்வரை முதலாளி ஆக்குவது, திருவிழாவி்ல சண்டைபோடுவது, ஆட்டுபுழுக்கை விற்பது, டான்ஸ் குரூப் பாசக்காட்சிகள் நல்ல இடங்கள். கொலையை துப்பறியும் போலீசாக முத்துகுமார், சிங்கம்புலி, வடிவேல்முருகன் நன்றாக நடித்து இருக்கிறார்கள். வடிவேல்முருகன், அவர் மனைவியாக வரும் விஜே பார்வதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. டான்சராக வரும் ரிஷா தான், விஜய்சேதுபதி ஜோடி என்பது புதுமையான விஷயம். சில எபிசோடுகளில் வரும் பாலாஜி சக்திவேலின் நடிப்பும், பேச்சும் அருமை. போலீஸ் ஸ்டேஷன், கிராமத்து காட்சிகள் இயல்பாக இருக்கிறது. வில்லன் சம்பந்தப்பட்ட விஷயங்களை இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம். கேரளா காட்சிகள் கொஞ்சம் போரடிக்கிறது. திரில்லர் கதைகளுக்கு உரிய விறுவிறுப்பு சில இடங்களி்ல் குறைவதும், மாறுபட்ட அல்லது சரியான விடை சொல்லாத கிளைமாக்சும் மைனஸ். விஜய்சேதுபதியை விரும்புகிறவர்களுக்கு, கொஞ்சம் புதுமையான வெப்சீரிஸ் ரசிக்கும், திரில்லர் விரும்பிகளுக்கும் முத்து என்கிற காட்டானை பிடிக்கும்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்











