தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சிக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் இன்றியமையாதவர்கள், அவர்களை அரசு திறந்த மனதோடு வரவேற்கிறது என தொழில்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பேசிய தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான அளவில் பங்களிப்பை செலுத்தியுள்ளனர் என்றும் அவர்களுடைய உழைப்பை நாங்கள் அங்கீகரித்துள்ளோம் எனவும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்கள் மீது அக்கறையையும், சமூக அணுகுமுறையையும் கொண்டுள்ளோம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு அரசு புலம்பெயர் தொழிலாளர்களை பாகுபடுத்தி பார்க்கவில்லை. மாநிலம் இவர்களின் உழைப்பால் கணிசமான அளவில் பலனடைந்துள்ளது.
நமது மாநில தொழிலாளர்களையும், புலம்பெயர் தொழிலாளர்களையும் நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. புதிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வாய்ப்பு வாசல் திறந்துள்ளது.” என்று கூறினார்.
மேலும், “கொரோனா தொற்று காலத்தில் இங்கு சிக்கியிருந்த இத்தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. அதேபோல அங்கிருந்த நமது மாநில தொழிலாளர்களை இங்கு அழைத்து வரவும் போதுமான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.பணியாற்றும்போது சில புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கான நிவாரணத் தொகை முறையாக அவர்களுக்கான குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.” என்று கிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்








