அக்னிவீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசும், ஹரியானா அரசும் அறிவித்துள்ளன.
நமது நாட்டின் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 4 ஆண்டு காலம் பணிபுரிவதற்கான அக்னிவீர் பணி வாய்ப்பு குறித்த அறிவிப்பை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புதிய திட்டத்தின் மூலம், 45 ஆயிரம் இளைஞர்கள் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இதற்கான பணி இன்னும் 90 நாட்களில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முதல் ஆண்டில் 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 33 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 36,500 ரூபாயும் 4ம் ஆண்டில் 40 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்த மத்திய பாதுகாப்புத் துறை, 4 ஆண்டு முடிவில் பணியில் இருந்து விடுவிக்கப்படுவோருக்கு ரூ.11.71 லட்சம் சேவை நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தது.
4 ஆண்டு கால பணியின் முடிவில், 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக பணிபுரிய தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அடுத்து 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், 4 ஆண்டுகால பணியை முடித்தவர்களுக்கு காவல்துறை மற்றும் அதுசார்ந்த துறைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், நாட்டுக்காக ராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தனது அரசு, காவல் மற்றும் அதுசார்ந்த பணிகளில் முன்னுரிமை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பாஜக அரசு இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய உறுதிபூண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அக்னிவீர் பணி முடித்தவர்களுக்கு ஹரியானா அரசு, அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் என்று முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், முதலாண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த ஊதியம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.