11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் பணியாளர்களில் 5 சதவீதம் பேரை இன்று பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக பல மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும்…

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் பணியாளர்களில் 5 சதவீதம் பேரை இன்று பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மை காலமாக பல மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது வாடிக்கையான ஒன்றாகவே மாறி வருகிறது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவரின் இந்த செயல்பாடுகளை தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான அமேசான், பேஸ்புக், மெட்டா ஆகியவையும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கமும் செய்தது.

இதனையடுத்து தற்போது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. வாஷிங்டனை மையாமாக கொண்டு செயல்படும் இந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 21 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் அமெரிக்காவிலும், 99 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் உள்ள அதன் கிளை நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களின் வரவு-செலவு தொடர்பான விவரங்களை இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ள சூழலில்,தனது பணியாளர்களில் 5 சதவிகிதம் பேரை அதாவது 11 பேரை இன்று பணிநீக்கம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவின்படி அந்நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு, பொறியியல் பிரிவு முதலிய பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றி வருபவர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பணிநீக்கத்திற்கான காரணம் என்ன?

தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம் சரிவில் உள்ளதால், அதன் விண்டோஸ் மற்றும் பிற சாதனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் புதிய வரம்பற்ற நேரக் கொள்கையை அமல்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், சந்தையில் தனது கிளை க்ளவுட் நிறுவனமான அசூர்-ன் வளர்ச்சியை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளது. இதன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவினங்களை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .

இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக சொல்லப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், தொடர்ந்து இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.