கட்டுரைகள் தமிழகம்

சரித்திரம் பேசும் சத்துணவுத் திட்டம்


விக்னேஷ்

கட்டுரையாளர்

குழந்தைகள் கல்வி கற்றால் மட்டுமே, எதிர்காலத்தில் நாட்டை மதிப்புமிகு மனிதவளமாக மாற்ற முடியும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்”. ஆண்டுதோறும் 50 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் இத்திட்டம், இன்று 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

தமிழ்நாட்டில், பச்சிளம் குழந்தைகளின் பசி போக்கிய திட்டம், கல்வி அறிவு சதவீதத்தை உயர்த்திய திட்டம், 50 ஆண்டுகால தமிழக அரசியலில் நீங்கா இடம்பிடித்த திட்டம் என பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கிறது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடித் திட்டமான சத்துணவு திட்டம், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதன் மூலம் அவர்களின் உடல்நலத்தினை மேம்படுத்துவதுடன், கல்வி கற்பதையும் உறுதி செய்து, அதன் முலம் ஊட்டச் சத்து குறைபாட்டினை களைவதே முதன்மை நோக்கமாக கொண்டது. இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டே, 1982 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட சத்துணவு எனும் சாகாவரம் பெற்ற திட்டம், 40 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

முதற்கட்டமாக கிராமப் புறங்களில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டம், பின்னாளில் நகர்ப்புற பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. ஏழைகளின் கடவுள் என்று எம்.ஜி.ஆர் அழைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த இந்த திட்டம் தான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கும், பிள்ளையார் சுழியாக அமைந்தது. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால், இந்த திட்டத்தை மேலும் பட்டை தீட்டினார் அன்றைய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

2014 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சத்துணவு திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் சூடான, சுவையான கலவை சாத உணவு வகைகளையும் அறிமுகம் செய்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கலவை சாதத்துடன் சேர்த்து வாரத்தில் ஐந்து நாட்களிலும் முட்டைகளும், வாழைப்பழங்களும் வழங்கப்படுகின்றன. சத்துணவுத் திட்டத்தை தொடங்கிய நாள் முதல், பள்ளி செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து, கல்வி அறிவு பெறுவோரின் சதவீதமும் அதிகரிக்க தொடங்கியது. இந்த சத்துணவுத் திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் 50 லட்சம் குழந்தைகள் பயனடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மையாக இருப்பதற்கு சத்துணவு திட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

நீதிக்கட்சித் தலைவர் பி.டி.தியாகராய செட்டியாரால் தொடங்கப்பட்ட பகல் உணவுத் திட்டம், காமராஜரால் உருவெடுத்த மதிய உணவுத்திட்டம், எம் ஜி ஆரால் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம்.. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை, அனைவராலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டிருந்தாலும், இன்றளவும் மக்களால் கொண்டாடப்படும் மகத்தான திட்டமாக மிளிர்கிறது. 40 ஆண்டில் அடியெடுத்துவைக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம், 400 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்…

Advertisement:
SHARE

Related posts

இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

Niruban Chakkaaravarthi

தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் – மகேந்திரன் வாக்குறுதி

Gayathri Venkatesan

நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்

எல்.ரேணுகாதேவி