உண்மையிலேயே கடல் பற்றி எரிந்த சம்பவம் மெக்சிகோ வளைகுடாவில் நடந்துள்ளது. கடலின் கீழ் எரிபொருளை கொண்டு செல்லும் பைப்லைனில் கசிவு ஏற்பட்டதை அடுத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டது.
மெக்சிகோ அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெமேகஸ் என்ற பெட்ரோலிய நிறுவனம், கடல் வழியே பைப் அமைத்து, அதன் மூலம் எரிபொருளை விநியோகித்து வருகிறது. அந்த நிறுவனத்தின் எரிபொருள் பைப்பில் ஓரிடத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக, எரிபொருள் தீ பிடித்து எரியத் தொடங்கியது. சுமார் 5 மணி நேரத்திற்கு தீ மளமளவென பற்றி எரிந்த நிலையில், நைட்ரஜன் வாயுவைக் கொண்டு தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.
கடலின் மையப் பகுதியில், தண்ணீருக்குள் இருந்து தீப்பற்றி எரியும் இந்த அரிய காட்சி, சமூக வலைத்தலங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கடலில்கூட இவ்வாறு தீ விபத்து ஏற்படும் என்பதை நம்பவே முடியவில்லை என பலரும் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கனடா கொதித்துக் கொண்டு இருக்கிறது. ஆம்.. இதுவரை காணாத வெப்பத்தை கனடா நாட்டு மக்கள் கடந்த ஒரு வாரமாக அனுபவித்து வருகின்றனர். ஹீட் டூம் எனப்படும், வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்ப அலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு 120 டிகிரி ஃபேரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 110 டிகிரியை நெருங்கினாலே வீட்டை விட்டு தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படும். அப்படியிருக்க கனடாவில் 120 டிகிரி வெப்பம் பதிவாவதால், தார் சாலைகள் உருகி வெடிப்புகள் ஏற்படுகின்றன. ரயில் தண்டவளங்களும் உருகுகின்றன. அதோடு, பிரட்டை ஓவனில் வைத்து சூடேற்றுவதற்குப் பதில், பற்றி எரியும் வெயிலில் நிற்கும் காரையே ஓவனாகப் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை அங்கு மோசமாகிக் கொண்டிருக்கிறது. கனடா மக்கள் தாங்கள் சந்தித்து வரும் கொடுமைகளை உலக மக்கள் அறியும் வண்ணம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடும் வெப்பம் காரணமாக கனடாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்துக்கொண்டிருக்கிறது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 700 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காலங்கடந்த பருவமழை, வெப்ப அலை, புயல், கடுங்குளிர், பனிப்பாறைகள் உருகுவது என உலகில் நடக்கும் அனைத்திற்கும் பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றமே காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில், இயற்கையுடன் மோதும் நடவடிக்கைகளை மனிதகுலம் நிறுத்துவதன் மூலமே இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்று அவர்கள் தொடர்ந்து உரக்க கூறி வருகிறார்கள். ஆனால், கேட்க வேண்டியதை உரிய காலத்தில் கேட்பதற்கு உலகம் தயராக இருக்கிறதா என்பதே மிகப் பெரிய கேள்வி.
- செளந்தர்யா







