மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரம் படி 119.290 அடியாக உள்ளது
கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலை 8 மணி நிலவரம் படி 119.290 அடியாக உள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரியில் தற்பொழுது சுமார் 1.08 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. நேற்று மதியம் 12.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.81 அடி, கொள்ளளவு 85.434 டி.எம்.சி. நீர்வரத்து 1.08 லட்சம் கன அடியாக இருந்தது. இந்நிலையில், காலை 8 மணி நிலவரம் படி 119.290 அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையிலிருந்து நடப்பாண்டு முன்கூட்டியே மே மாதம் 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து நீர்மட்டம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாகக் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், அங்கிருந்து அதிக அளவிலான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அண்மைச் செய்தி: ‘மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாகக் குளிக்கத் தடை!’
இந்நிலையில், தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு விவசாயப் பணிகளுக்கு முன்னரே திறந்து விட உத்தேசிக்கப்பட்டு, அனைத்து கால்வாய்களிலும் இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,17,613 கன அடியிலிருந்து 1,18,671 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.








