முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

குடியரசு தலைவர் தேர்தல்: எம்.பிக்கள் வாக்கு மதிப்பு குறைந்தது ஏன்?


எஸ்.இலட்சுமணன்

இந்தியாவின் முதல் குடிமகன், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவர், முப்படைகளின் தலைவர்  என பல்வேறு பெருமைகள் வாய்ந்த குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நெருங்கிவிட்டது. தற்போது குடியரசு தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ந்தேதியுடன் நிறைவடையும் நிலையில் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது.

குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கென தனியாக வாக்காளர் குழுமம் உள்ளது. மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையை கொண்டுள்ள யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் ஆகியோர் அடங்கிய வாக்காளர் குழுமத்தில் அங்கம் வகிப்பவர்களே குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும். நாடாளுமன்றத்தின் நியமன உறுப்பினர்களுக்கும், மாநில சட்டமேலவை உறுப்பினர்களுக்கும் இந்த தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அந்த வகையில் வரும் 18ந்தேதி நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் மக்களவை எம்.பிக்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் 4033 பேர் என மொத்தம் 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் அளிக்கும் வாக்குகளின் மொத்த மதிப்பு 10,86,431. இதில் எம்.பிக்கள் அளிக்கும் வாக்குகளின் மொத்த மதிப்பு 5,43,200 ஆகும். எம்.எல்.ஏக்கள் அளிக்கும் வாக்குகளின் மொத்த மதிப்பு 5,43,231 ஆகும். இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 31தான். அதவாது எம்.பி.க்கள் வாக்கின் மொத்த மதிப்பும், எம்.எல்.ஏக்கள் வாக்கின் மொத்த மதிப்பும், கிட்டதட்ட சமநிலையில் உள்ளது. இவ்வாறு சமநிலையில் இருக்கும் அளவிற்கு எம்.பி, எம்.எல்.ஏக்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படும் வகையில் இந்திய அரசியல் சாசன சட்டத்தில் வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்குகளின் மொத்த மதிப்பு 10,98,903ஆக இருந்தது. இந்த முறை நடைபெறும் தேர்தலில் இந்த மதிப்பு 10,86,431ஆக குறைந்துள்ளது. இதற்கான காரணம் என்ன? கடந்த முறை ஒரு எம்.பியின் வாக்கின் மதிப்பு 708ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 700ஆக குறைந்துள்ளது. இது ஏன்?…இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையை தெரிந்துகொள்வதற்கு முன்பாக குடியரசு தலைவர் தேர்தலில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.

பொதுவாக குடியரசு தலைவர் தேர்லில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மட்டுமே வாக்களிப்பதாக தெரிந்தாலும், மறைமுகமாக பொதுமக்களும் இந்த தேர்தலில் பங்ககொடுக்கும் வகையில்,  மக்கள் தொகை அடிப்படையில் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது,. எம்.எல்.ஏக்களின் மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் தொகை அடிப்படையில் மாறுபடும். 1971ம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை அந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி கிடைக்கும் எண்ணால்  வகுக்கும்போது கிடைக்கும் ஈவு தொகையே அந்த மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏவினுடைய வாக்கின் மதிப்பாகும்.

உதாரணமாக 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 4,11,90,000. தமிழ்நாட்டில் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை- 234

4,11,90,000/234000= 176

தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ அளிக்கும் வாக்கின் மதிப்பு 176.  234 எம்.எல்.ஏக்கள் அளிக்கும்  வாக்குகளின் மொத்த மதிப்பு 41,184

இந்த கணக்கீடு அடிப்படையில் பிற மாநிலங்களில் எம்.எல்.ஏக்கள் வாக்கின் மதிப்பு எவ்வளவு எண்பதை காண்போம்.

மாநிலம்          ஒரு எம்.எல்.ஏ வாக்கின் மதிப்பு      மொத்த வாக்கின் மதிப்பு

ஆந்திரா                         159                                                                   27,825

தெலங்கானா             132                                                                   15,708

கேரளா                          152                                                                   22,280

கர்நாடகா                     131                                                                 29,344

அருணாச்சல                8                                                                     480

பிரதேசம்

அசாம்                               116                                                           14,616

பீகார்                                 173                                                           42,039

சத்தீஷ்கர்                       129                                                           11,610

டெல்லி                              58                                                             4,060

கோவா                              20                                                             800

குஜராத்                           147                                                           26,754

ஹரியானா                  112                                                           10,080

இமாச்சல்

பிரதேசம்                           51                                                         3,468

ஜம்முகாஷ்மீர்                 72                                                         6,264

ஜார்க்கண்ட்                        176                                                      14,256

மத்தய

பிரதேசம்                             131                                                      30,130

மகாராஷ்டிரா                    175                                                   50,400

மணிப்பூர்                             18                                                      1,080

மேகாலயா                            17                                                     1,020

மிசோராம்                              8                                                     320

நாகாலாந்து                           9                                                      540

ஒடிசா                                       149                                                 21,903

புதுச்சேரி                                16                                                   480

பஞ்சாப்                                    116                                                13,572

ராஜஸ்தான்                            129                                               25,800

சிக்கிம்                                       7                                                   224

திரிபுரா                                    26                                                1,560

உத்தர

பிரதேசம்                              208                                                    83,824

உத்தர்காண்ட்                      64                                                   4,480

மேற்குவங்கம்                    151                                                 44,394

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில்தான் எம்.எல்.ஏக்கள் வாக்கின் மதிப்பு அதிகம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை மாநிலங்களவை, மக்களவை என இரண்டு அவைகளின் உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கிற்கு ஒரே முறையில்தான் மதிப்பு கணக்கிடப்படுகிறது, அனைத்து மாநிலங்கள் மற்றம் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் மொத்த மதிப்பை மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கையால் வகுக்கும்போது கிடைக்கும் எண்தான் ஒரு எம்.பி. அளிக்கும் வாக்கின் மதிப்பாக நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது நாடெங்கிலும் உள்ள மொத்த எம்.எல்.ஏக்களின் மதிப்பான 5,43,231ஐ மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தம் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் எண்ணிக்கையான 776ஆல் வகுக்க வேண்டும்.

5,43,231/776= 700.03 அதாவது ஒரு எம்.பி அளிக்கும் வாக்கின் மதிப்பு 700

 

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் ஒரு எம்.பியின் மதிப்பு 708. ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளதுவே எம்.பி. வாக்கு மதிப்பு குறைந்ததற்கு காரணம். 87 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மொத்த எம்.எல்.ஏக்களின் வாக்குமதிப்பு 6,264ஆக இருந்தது. தற்போது அந்த சட்டடப்பேரவை கலைக்கப்பட்டு தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 6,264 மதிப்பு நாடு முழுவதும் உள்ள மொத்த எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பிலிருந்து கழிவதால் எம்.பிக்கள் வாக்கின் மதிப்பும் குறைந்துள்ளது.

1952ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் குடியரசு தலைவர் தேர்தலில் ஒரு எம்.பியின் மதிப்பு 494ஆக இருந்து. 1957ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 496ஆகவும், 1962ம் ஆண்டு தேர்தலில் 493ஆகவும் எம்.பிக்களின் மதிப்பு தீர்மானிக்கப்படிருந்தது. 1967 மற்றும் 1969ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல்களில் எம்.பிக்கள் வாக்கின் மதிப்பு 576ஆக அதிகரித்தது. 1974ம் ஆண்டுதான் எம்.பிக்கள் வாக்கின் மதிப்பு அதிகபட்சமாக 723ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு 1977ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல்களில் எம்.பிக்கள் வாக்கின் மதிப்பு 702ஆக இருந்தது. அதன் பிறகு நடைபெற்ற 5 குடியரசு தலைவர் தேர்தல்களில் எம்.பிக்கள் வாக்கின் மதிப்பு 708ஆக அதிகரித்த நிலையில் தற்போது 700ஆக குறைந்துள்ளது. குடியரசு தலைவர் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்கள் தங்கள் வாக்கினை செலுத்தலாம். கொறாடா உத்தரவை பின்பற்ற வேண்டும் என்கிற விதி இந்த தேர்தலில் பொருந்தாது என்பதால் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கட்சியின் நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல் தங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு சுதந்திரமாக வாக்களிக்கலாம்.

வரும் 18ந்தேதி நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநிவ முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார். இருவரில் யாருக்கு வெற்றி என்பது ஜூலை 21ந்தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விபத்தில் உயிரிழந்த ரசிகர்: குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற நடிகர் ஜெயம் ரவி!

Web Editor

கொரோனா தடுப்பூசி 95 சதவீத பாதுகாப்பை தருகிறது: தமிழ்நாட்டில் நடந்த ஆய்வில் உறுதி

EZHILARASAN D

’பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ – அமைச்சர் பெரியகருப்பன்

EZHILARASAN D