கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீலவழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனையில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ இரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
நீலவழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனையில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ இரயில் சேவை, கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
விம்கோ நகரில் இருந்து சின்னமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை பயணிகள் வழக்கம் போல் பயணித்துக் கொள்ளலாம்
நீலவழித்தடத்தில், விமான நிலையம் செல்ல விரும்பும் பயணிகள், சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து, ஆலந்தூர் வரை ஒருவழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ இரயிலில் பயணம் செய்து, ஆலந்தூரில் வழித்தடம் மாறி, விமான நிலையம் சென்றடையலாம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் செல்லும் பயணிகள் எந்தவித சிரமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் முடிவடைந்தவுடன், மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குறிப்பிட்ட தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாததால் பணிக்கு செல்லும் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இதனால் கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.







