மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகளால் ஏற்படும் புழுதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. புழுதியையும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் கட்டுப்படுத்துவது இந்த வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டிருக்கும் போதிலும், அது பின்பற்றப்படாதது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் மாதவரம் – சிப்காட், மாதவரம் – சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் & பூவிருந்தவல்லி என மூன்று வழித்தடங்களில் 121 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளும், சென்னையில் 6 திட்டங்களின்படி மொத்தம் 125 கி.மீ தொலைவுக்கு வெள்ள வடிகால்கள் அமைக்கும் பணிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் தொடர்ச்சியாக கடந்து செல்பவர்களின் எண்ணிக்கை சென்னையின் மொத்த மக்கள்தொகையில் 75% ஆகும். ஒட்டுமொத்த சென்னை மாநகர மக்களுமே வாரத்திற்கு ஒருமுறையாவது இந்தப் பணி நடைபெறும் பகுதிகளைக் கடந்து செல்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது இந்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டியது கட்டாயம்.
சென்னை ஏற்கனவே காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் ஒன்றாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய தேசியத் தூய காற்றுத் திட்டத்தில் சென்னை மாநகரம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது நடைபெற்று வரும் பணிகள் சென்னையின் காற்று மாசுவை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து வருகின்றன. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
சென்னை புழுதிக்காடாக மாறுவதை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை விதிகள், இந்திய சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) திருத்த விதிகள், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்ட உடன்படிக்கை ஆகியவற்றின்படி சென்னை மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றில் புழுதி பறப்பதையும், சாலைகளில் மண் கொட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான விதிகளை மதிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் காற்று மாசு பாதிப்புகளில் இருந்து சென்னை மக்களை ஓரளவாவது பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








