சென்னை மெட்ரோவில் paytm மூலமும் டிக்கெட் எடுக்கும் முறை அறிமுகம்.!

சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து paytm மூலமும் டிக்கெட் எடுக்கும் முறையை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்து வைத்தது. சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm ‌செயலி…

சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து paytm மூலமும் டிக்கெட் எடுக்கும் முறையை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்து வைத்தது.

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm ‌செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே மும்பை, ஹைதராபாத் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் Paytm செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி உள்ள நிலையில், தற்போது சென்னையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Paytm செயலில் transit பகுதியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் என்ற option உள்ளது. அதில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். ஒரு முன்பதிவில் அதிகபட்சம் 6 டிக்கெட் எடுத்து கொள்ளலாம். வழக்கம்போல் மெட்ரோ டிக்கெட் பெறும் முறைகளில் 20% கட்டண தள்ளுபடி உள்ளது போன்று, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள paytm செயலிலும் அந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் கூறியதாவது;

சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு எளிதான முறையில் பயண சீட்டு வாங்க இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பே டி எம் ஆப் இல் இருந்தே மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் பெற்று கொள்ளலாம். ஏற்கனவே க்யூ ஆர் கோட், வாட்ஸ்ஆப், மெட்ரோ ஆப் மூலம் எல்லாம் டிக்கெட்டை எடுக்கும் முறை உள்ளது. பே டி எம் பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளதால் இது உதவும்.

மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் பயணிகள் அதிகமாக வரும் காலை மற்றும் மாலை நேரங்களில், கூட்டத்தை சமாளிக்க வரும் நாட்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் சேர்க்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. முதற்கட்ட திட்டத்தில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில் பெட்டிகளை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரயில் தொடர்களில் இணைப்பு பெட்டிகளை இணைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால் மாற்று வழியாக கூடுதலாக 28 ரயில் தொடர்களை வாங்க முடிவு செய்துள்ளோம். அவை இன்னும் 2 வருடங்களில் நடைமுறைக்கு வர இருக்கிறது.

மெட்ரோ அடையாள அட்டை புதிதாக யாருக்கும் வழங்கவில்லை. பழைய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். புதிதாக அட்டை வாங்க முன்வருபவர்களுக்கு NCMC அடையாள அட்டை வழங்கி வருகிறோம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மெட்ரோ பார்க்கிங்கில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பயணம் செய்யாதவர்கள் பார்க்கிங்கை
பயன்படுத்துவதால் போதுமான இட வசதி இல்லாத நிலை ஏற்படுகிறது.

மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. நகர் முழுவதும் உயர்மட்ட மேம்பாலத்திற்காக அமைக்கப்படும் தூண்களின் பணி அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். 2025 இல் பணிகள் முடிக்கப்பட்டு, சேவை தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னை ஆழ்வார் திருநகர் முதல் ஆலப்பாக்கம் பகுதியில் double tucker கட்டுவதால் கால அவகாசம் அதிகமாக தேவைப்படுகிறது.

இவ்வாறு சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.