ஜெர்மனியில் நடைபெற்று வரும் உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டியில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 6 தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை
வென்றுள்ளனர்.
ஜெர்மனி நாட்டின் காலணே நகரில் உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டிகள்
நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 7 தடகள வீரர்கள்
கலந்து கொண்டுள்ளனர். இந்த 7 பேருக்கும் தமிழ்நாடு அரசு இந்த போட்டியில்
கலந்து கொள்வதற்கான ஊக்கத் தொகையையும் வழங்கி அனுப்பி வைத்திருந்தது.
எடை, வயது, உடல்வாகு உள்ளிட்ட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று
வரும் இந்த போட்டியில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச்
சேர்ந்த கணேசன் என்ற வீரர் மூன்றாவது பிரிவில் வட்டு எரிதல், ஈட்டி எறிதல்,
குண்டு எறிதல் போட்டியில் மூன்றிலும் மூன்று தங்க பதக்கங்களை வென்று
அசத்தியுள்ளார்.
இதே போன்று மதுரையைச் சேர்ந்த மனேஜ் என்ற வீரர், குண்டு எறிதலில் தங்கமும்,
வட்டு எறிதலில் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் என்ற வீரர் ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.







