நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கோடநாடு வழக்கு குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்பது சரியா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையின் மரபும் மாண்பும் காக்கப்பட்டதைப் போன்று திமுக ஆட்சியிலும் அவையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை மன ரீதியாக துன்புறுத்தி, பேச விடாமல் தடுத்ததன் காரணமாகவே சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத்தில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விவாதிக்க கூடாது என்று விதி உள்ளது. நீதிமன்றம் பணியை சட்டமன்றம் எவ்வாறு செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து கொடநாடு விவகாரத்தில் மடியில் கனம் இல்லை; அதனால், எங்களுக்கு வழியில் பயம் இல்லை என குறிப்பிட்டு பேசிய அவர், நீதிமன்றத்தில் வழக்கு இல்லை என்றால் அதை குறித்து விவாதிக்க தயார். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது என தெரிவித்தார்.







