மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி அமாவாசை தினமான நேற்று
ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி மாத அமாவாசை தினமான நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
உற்சவர் அங்காளபரமேஸ்வரி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்
பாலித்தார். இதனைத் தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் பூசாரிகள் அங்காளம்மனை தோளில் சுமந்து வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்து உற்சவத்தில் அமர வைத்தனர். பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாட ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அங்காளம்மனை வழிபட்டனர். ஊஞ்சல் உற்சவ ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இவ்விழாவினை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூர் பகுதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் செஞ்சி துணைக் கண்காணிப்பாளர் கவினா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.







