மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் ஆடி மாத அமாவாசை தினமான நேற்று திங்கள்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் *பவானி அம்மன்* அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் நள்ளிரவு 10.30 மணிக்கு பவானி அம்மன் அலங்காரத்தில் இருந்த உற்சவர் அங்காளம்மனை கோவிலின் வடக்கு வாயில் வழியாக தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர்.
அப்போது பக்தி பரவசமடைந்த பக்தர்கள் கையில் சூடம் ஏற்றி சாமி ஆடி அம்மனை தரிசனம் செய்தனர். நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரினம் செய்தனர். மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





