சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை
முன்னிட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை விருந்து
தயாரிக்கப்படுவது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 4
ஆம் தேதி வரை நடைபெறுகிறது, மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில்
கொடியேற்றம், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம்
மிக முக்கிய நிகழ்வாகும்,.
இதில் மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை நகருக்குள் வருவார்கள். அப்படி வரக்கூடிய பக்தர்களுக்கு 23 ஆண்டுகளாக உணவுகள் வழங்கி வருகிறது ஒரு அமைப்பு. பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்தர் சபையினர் தொய்வின்றி திருக்கல்யாண விருந்து வைபவத்தை நடத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் இந்த அறுசுவை விருந்து நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரருக்கு நாளை (மே 2) திருக்கல்யாணம் என்பதால் திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்காக அறுசுவை விருந்து தயாராகி வருகிறது. இன்று மாலை, நாளை காலை, மதியம் என 3 வேளை கல்யாண விருந்து வழங்கப்படுகின்றது.
மக்களிடம் இருந்து இருந்து பெறப்பட்ட அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை கொண்டு விருந்து தயாரிக்கப்படுகிறது. 500 க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு விருந்து தயாரிக்கப்படுகிறது. 2,000 தன்னார்வலர்கள் காய்கறிகள் வெட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி
சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், கேசரி, வடை என உணவு வழங்கப்படுகிறது. 6 டன் அரிசி, 6 டன் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறது. இந்த திருக்கல்யாண விருந்தை தயாரிக்க வருகை தரும் சமையல்
கலைஞர்கள், உதவியாளர்கள் யாரும் எந்த ஒரு ஊதியமும் பெறுவதில்லை.
பல ஆண்டுகளாக கோவிலுக்காகவும், மக்களுக்காகவும் இந்த சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் காய்கறிகளை வெட்டி கொடுக்கும் பணிக்கு வரும் பெண்கள் ஆண்டாண்டாக இச்சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். மக்களுக்காக விருந்து தயாரிக்க உதவிடும் வகையில் செயல்படுவது பெரும் மகிழ்ச்சியை தருவதாக சேவையில் ஈடுபடும் பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
யாரும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு லட்சம் பேருக்கு உணவை தயாரிக்கும் பணியிலே மிக தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இந்த அறுசுவை உணவு வழங்கப்படுவதனால் சித்திரை திருவிழாவுக்கு வரக்கூடிய பக்தர்கள் பசியின்றி உணவை உண்டு அவர்களுடைய ஊருக்கு திரும்ப செல்வதற்கு வழிவகையாக உள்ளது. ஆண்டாண்டு காலமாக நடைபெறக்கூடிய இந்த திருக்கல்யாண விருந்துக்கு மதுரையில் இருக்கக்கூடிய ஏராளமான மக்கள்களும் பக்தர்களும் உதவி செய்து வருகிறார்கள். மீனாட்சி அம்மனை வழிபட்டு பசியோடு மக்கள் வீடுகளுக்கு திரும்பக் கூடாது என இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருக்கல்யாண விருந்து குறித்து காணொளியில் காண..







