உலகப்புகழ் பெற்ற ஆஸ்திரேலிய ஊடகத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான் ரூபர்ட் முர்டாக், தனது 92வது வயதில் 5-வது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் ஒருவர் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அங்கு இந்த வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்ள கூடாது போன்ற எந்த வித கட்டுப்பாடுகளும் கிடையாது. அந்த வகையில் ஆஸ்திரேலியவில் இயங்கி வரும் புகழ்பெற்ற ஃபாக்ஸ் கார்ப் என்ற ஊடக நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான ரூபர்ட் முர்டாக், விரைவில் தான் 5 வது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். மெல்போர்னில் பிறந்த முர்டாக், சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்குச் சொந்தக்காரர். தற்போது 92 வாயதாகும் இவர், அன் லிஸ்லி ஸ்மித் என்னும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணம் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
66 வயதாகும் அன் லிஸ்லி ஸ்மித் ஏற்கனவே செஸ்டர் ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவரை இழந்தவர். மறைந்த அன் லிஸ்லி ஸ்மித்தின் கணவர் செஸ்டர் ஸ்மித், நாட்டுப்புற பாடகராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தவர். செஸ்டர் ஸ்மித் இறந்து 14 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்த்து வந்த அன் லிஸ்லி ஸ்மித் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூபர்ட் முர்டாக்கை எதேச்சையாக சந்தித்துள்ளார். இவர்களது இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது. ரூபர்ட் முர்டாக்குக்கு ஏற்கெனவே 4 முறை திருமணமாகி, 6 குழந்தைகள் உள்ளனர். தனது 4 – வது மனைவியான முன்னாள் மாடல் அழகி ஜெர்ரி ஹால் என்பவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில்தான் அன் லிஸ்லி ஸ்மித்தை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ள முர்டாக், நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பாதியை ஒன்றாகக் கழிக்க எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு 5-வது மனைவியாக வர உள்ள அன் லிஸ்லி ஸ்மித்காக அஸ்ஷர்-கட் வைர மோதிரத்தை வாங்க முர்டாக் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









