ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில் சிமெண்ட் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை: தயாரிப்பாளர்கள் உறுதி

ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில் சிமெண்ட் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அசோஷியேசன் உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாகள தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அசோஷியேசன் கூறியுள்ளதாவது; “கொரோனா தொற்றின்…

ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில் சிமெண்ட் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அசோஷியேசன் உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பாகள தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அசோஷியேசன் கூறியுள்ளதாவது;

“கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சிமெண்ட் தொழிலும் பிற தொழில் துறைகளைப் போலவே கடினமான சூழல்களை சந்தித்து வருகிறது. கொரோனா சூழலில் சிமெண்ட் ஆலையின் 30 முதல் 40 சதவீத திறன் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் முந்தைய பொது ஊரடங்கு, இப்போதைய பொது ஊரடங்கு ஆகிய இரண்டு காலகட்டங்களிலும் எங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்.

சிமெண்ட் தொழிலின் சொந்த வாழ்வாதாரம், அனைத்து மட்டத்திலும் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொள்ளும் போது சிமெண்ட் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மொத்த கட்டுமான செலவில் சிமெண்ட்டின் விலை என்பது ஒரு சிறிய பங்கு மட்டுமே.

எனினும், தொழிற் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வேண்டுகோளின்படி, கொரோனா எனும் சோதனையான காலகட்டத்தில் போதுமான மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில் சிமெண்ட் கிடைப்பதை உறுதி செய்கின்றோம். சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு பெரும் தள்ளுபடி விலையில் சிமெண்டை கிடைக்கச் செய்வது என்ற அடிப்படையில் சிமெண்ட் தொழில்துறையானது தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு தனிப்பட்ட முன்னெடுப்பு முயற்சிகளுக்கும் சிமெண்ட் தொழில் துறையானது, முழுமையான ஆதரவை வழங்கும்.”

இவ்வாறு தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அசோஷியேசன் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.