அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் சிறந்த மனித உரிமை நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை தன்னார்வ அடிப்படையில் முன்வந்து செயல்பட வேண்டுமென ஜப்பான், நியூசிலாந்து நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51-ஆம் ஆண்டு அமர்வு நடைபெற்று வருகிறது. இதில், ஜப்பான், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். நியூசிலாந்து தெரிவித்துள்ள கருத்தில், அமைதியான முறையிலான போராட்டங்கள் மற்றும் கருத்து சுதந்திரத்தை முழு அளவில் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு பொறுப்பு மிகவும் அவசியமானது என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை உருவாக்கி காலமாறு நீதி பொறிமுறைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல், ஜப்பான் அரசு தெரிவித்துள்ள கருத்தில், இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து மக்களின் உரிமைகளை உறுதி செய்யக்கூடிய நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும். அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் சிறந்த மனித உரிமை நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை தன்னார்வ அடிப்படையில் முன்வந்து செயல்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
-இரா.நம்பிராஜன்







