மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு நகராட்சி தொடக்கப் பள்ளியின் பழுதடைந்த சமையலறை கட்டடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியின் கட்டிடம் கடந்த 1976ம் ஆண்டு கட்டப்பட்டதால் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்தன.இதனால் மாணவர்கள் அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு வைத்து கல்வி கற்பிக்கப்படுகிறது.
ஆனால் சமையலறை மட்டும் இன்னும் பள்ளியின் கட்டிடத்திலேயே இயங்குகிறது. இந்நிலையில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சமையலர் கலா மாணவர்களுக்கு உணவு தயார் செய்வதற்காக சமையல் கூடத்தில் இருந்து வேலை பார்த்துள்ளார்.அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் கலாவை அழைக்கவே அவர் சென்றிருக்கிறார்.
அந்நேரம் சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது.இதில் கேஸ் அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்கள் சேதமடைந்தன.நல்வாய்ப்பாக அந்நேரம் அங்கு ஊழியர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அருகிலுள்ள பள்ளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டது.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நகராட்சி உறுப்பினர் இதயவர்மன் நேரில் பார்வையிட்டார்.
வேந்தன்







