ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம் – கவர்னர் மீது திருமாவளவன் தாக்கு

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகள் மேற்கொள்ளலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக…

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு
ஆர்எஸ்எஸ் பணிகள் மேற்கொள்ளலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை
சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான
தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி
விமான நிலையம் வந்தடைந்தார்.

அதன் பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்
கூறியதாவது..

”தமிழக ஆளுநர் ரவி குதர்க்கமான கருத்துகளை தொடர்ந்துபேசி
வருகிறார். வேண்டுமென்றே பெரியார், அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும், அதற்கு எதிரான கருத்து தோற்றம் உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அவர்  ஒரு அரசியல் அமைப்பு சட்ட பிரதிநிதி, எனவே  அவர் தனது ஆளுநர்  பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகள் மேற்கொள்ளலாம். மேலும் அவர் தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். இது அரசியல் அமைப்பு சட்டத்தை  அவமதிப்பதாகும்.

தமிழ்நாடு, தமிழகம் என்பது ஒரே பொருள் தான். தமிழ்நாடு என்பது  சட்ட பூர்வமாக, காமராஜர் காலத்திலும் அண்ணா காலத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புகையோடு பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆகவே ஆளுநரின் இந்த  கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

திமுக அரசின் கொள்கைக்கும், திராவிட அரசியல் கோட்பாட்டிற்கும் அவர் எதிரானவர். எனவே தமிழ்நாடு அரசின், திமுக அரசின், திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக் கூடிய உரையை ஆற்ற எந்த வகையிலும் அவர் தகுதி படைத்தவர் அல்ல.” என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.