மகப்பேறு விடுப்பு என்பது பெண் ஊழியர்களின் அடிப்படை உரிமை என ஒடிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சொர்ணலதா. இவர் 2013-ஆம் ஆண்டில் 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் அவரின் மகப்பேறு விடுப்பு, தொகுதி மானியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு பொருந்தாது என காரணம் கூறி விடுப்பை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதனை எதிர்த்து சொர்ணலதா தாக்கல் செய்த மனு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மகப்பேறு விடுப்பு என்பது பெண் ஊழியர்களின் அடிப்படை உரிமை என்றும், விடுப்பு தர மறுப்பது பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் என நீதிபதி சசிகந்தா மிஸ்ரா தெரிவித்தார்.
மகப்பேறு விடுப்பை மற்ற விடுமுறைகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என்றும் நீதிபதி கூறினார். 4 வாரங்களுக்குள் ஆசிரியை சொர்ணலதாவின் விடுப்பை அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.







