மே 22ஆம் தேதி வெளியாகி மக்களிடையே மிக வரவேற்பு பெற்ற நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழா, சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள நட்சத்திர தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படத்தில் கதாநாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு தங்கச் செயினை தயாரிப்பாளர் போனி கபூர் பரிசளித்தார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ஆரி மேலும் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கூறுகையில், “நெஞ்சுக்கு நீதி படத்தை நான் பேசுவதை விட மக்கள் பேசவேண்டும் என்று நினைத்தேன். இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். உதயநிதி சார் உடன் இணைந்து பண்ணும் முதல் படம் இதுவாகும். ஒரு சமூக நீதி அடங்கிய ஒரு படத்தை தமிழில் செய்திருப்பது பெருமையாக இருக்கிறது” என்றார்.
நடிகர் ஆரி பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் சார் எனக்கு எப்போதுமே ராசியானவர். நெடுஞ்சாலை மாதிரி இனி ஒரு படம் பண்ணுங்க என்று மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். நெடுஞ்சாலைக்கு பிறகு, நான் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் பெரிய வரவேற்பு பெற்று 50 நாளுக்கு மேல் ஓடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த படத்திற்கு முதல் முதலில் மேடையில் பரிசு வாங்கி இருக்கிறேன். லைப்ரவரி (நூலகம்) மாதிரி ஒரு படத்தை எடுத்து இருக்கிறார் அருண்ராஜா காமராஜ்” என்றார் ஆரி.

படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “படத்தின் வெற்றிக்கு இயக்குநர்தான் காரணம். நீங்களும் (அருண்ராஜா காமராஜ்) யோசித்துதான் இந்தப் படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளீர்கள். ஷூட்டிங்கில் நிறைய டேக்குகள் எடுத்தீர்கள். சிரிக்கக் கூடாது, கண்சிமிட்ட கூடாது என்றெல்லாம் கூறினீர்கள். ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு மாதிரி படத்தை இயக்குகிறார்கள். அருண்ராஜா சிறப்பாக இந்தப் படத்தை இயக்கினார். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி” என்றார் உதயநிதி ஸ்டாலின்.







