ஆட்சேர்ப்பு அறிவிப்பாணையை ரத்து செய்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவிக் கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 இடங்களை நிரப்ப மின்சார வாரியம் சார்பில் ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், அனைத்து அறிவிப்பாணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழித்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கான கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா பரவல், சட்டமன்ற பொதுத்தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அனைத்து அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பணிகளையும் TNPSC மேற்கொள்ளும் என்ற அரசாணையின்படி, மின்சார வாரியம் மேற்கொள்ளவிருந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மின்சார வாரிய பணிகளுக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேல் காத்திருந்த தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-ம.பவித்ரா







