எளிமையாக நடந்த திருமணம்: அனாதை குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற கேரள தம்பதி

உறவினர்கள் இல்லாமல், கொண்டாட்டங்கள் இல்லாமல் எளிமையாக திருமணம் செய்து, அனாதைக் குழந்தைகள் 20 பேரின் கல்விச் செலவை ஏற்ற கேரள தம்பதியின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். டெல்லியைச் சேர்ந்தவர் இந்திய தபால் சேவை…

உறவினர்கள் இல்லாமல், கொண்டாட்டங்கள் இல்லாமல் எளிமையாக திருமணம் செய்து, அனாதைக் குழந்தைகள் 20 பேரின் கல்விச் செலவை ஏற்ற கேரள தம்பதியின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்தவர் இந்திய தபால் சேவை அதிகாரி சிவம் தியாகி. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்திய வருவாய் சேவை அதிகாரி ஆர்யா நாயர். இவர்கள் இருவருக்கும் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி திருமணம் எளிமையாக நடைபெற்றது. இவர்கள் தங்களது திருமணத்தை உறவினர்கள் இல்லாமல், கொண்டாட்டங்கள் இல்லாமல் நடத்தியதோடு மட்டுமல்லாமல், அனாதை குழந்தைகள் 20 பேரின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளனர்.

இதுகுறித்து, இந்திய வருவாய் சேவை அதிகாரி ஆர்யா நாயர் கூறுகையில், திருமணத்துடன் தொடர்புடைய கொண்டாட்டங்களைக் கைவிடுவது என்பது மிகவும் கடினமானது. எங்களது திருமணத்துக்காக அனைத்து உறவினர்களும், நண்பர்களும் காத்துக் கொண்டிருந்தனர். இரண்டு, மூன்று நாட்களுக்கு கேரள பாரம்பரியப்படி திருமண கொண்டாட்டங்களை நடத்த வேண்டும் என நினைத்திருந்தனர். எங்களது இந்த முடிவை பெற்றோர்களும், உறவினர்களும் முதலில் ஏற்கவில்லை. ஆனால், இப்போது எல்லோரும் எங்களைப் பாராட்டி வருகின்றனர்.

இந்தத் திருமணம் வருங்கால மணப்பெண்கள் மற்றும் மணமகன்களுக்கு ஆடம்பரத் திருமணங்கள் தேவையில்லை என்ற எண்ணத்தை அளிக்கும். ஆடம்பரமான திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சமூகத்தின் அழுத்தத்தைத் தாங்கும் தைரியத்தை இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, சிவம் தியாகி கூறுகையில், எளிமையான திருமணம் குறித்த யோசனையை முதலில் ஆர்யாதான் கூறினார். திருமண கொண்டாட்டத்தை எதிர்பார்த்திருந்த என் உறவினர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வரும் ஆண்டுகளிலும், அனாதை இல்லத்தில் உள்ள மாணவர்களின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க கண்டிப்பாக உதவுவோம் என்றார்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.