திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்குத் திருக்கோயில் சார்பாகப் புத்தாடைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் மணமக்களுக்குப் புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்த, அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் திருக்கோயில்களிலும் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்குத் திருக்கோயில் சார்பாகப் புத்தாடைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நிதியினை திருக்கோயில் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் திருக்கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிக்கவனம் செலுத்திக் கண்காணிக்கவும் மண்டல இணை ஆணையர்களைக் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், இந்த உத்தரவினை அனைத்து திருக்கோவில் நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி பயனாளிகளுக்குத் திட்டம் முழுமையாகச் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








