ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சீனாவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியாவிலிருந்து 303 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 17 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இத்தொடரின் முதல் நாளான இன்று, இந்திய அணி ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
ஆடவர் உயரம் தாண்டுதலில் கைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம்சிங் வெண்கலமும் வென்றனர். அதேபோல் மகளிர் படகுப் போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கத்தை தட்டித் தூக்கினார்.
உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், “ஆசிய பாரா விளையாட்டில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : அக்.25 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்
வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.







