பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்றார் தமிழ்நாடு வீரர் மாரியப்பன்

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவறவிட்ட தமிழ்நாடு வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் உள்பட…

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவறவிட்ட தமிழ்நாடு வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் உள்பட 3 வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கு 6 முறை வாய்ப்புகள் அளிக்கப்படும் நிலையில், தொடக்கம் முதலே தமிழ்நாடு வீரர் மாரியப்பனுக்கும், அமெரிக்க வீரர் சாம் க்ரேவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட்ட போதும், அமெரிக்க வீரருக்கு இணையாக தமிழ்நாடு வீரர் மாரியப்பன் திறமையை வெளிப்படுத்தினார்.

போட்டியின் இறுதிவரை அமெரிக்க வீரர் சாம் க்ரேவுக்கும் இடையே போட்டி நிலவியது. இறுதியில்,  1.88 மீ. உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார்.  1.86 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். மற்றொரு இந்திய வீரர் ஷரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

மாரியப்பன் அணிந்திருந்த கால் சாக்ஸ் மழையால் நனைந்திருந்ததே மாரியப்பன் தங்கப் பதக்கத்தை தவறவிட்டதற்கான காரணாம் என தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் குழு தலைவர் கிருபாகர ராஜா கூறியுள்ளார். தங்கம் வென்ற அமெரிக்க வீர்ர், கம்பியால் ஆன செயற்கை கால் பொருத்தியிருந்ததால் மழை குறுக்கீட்டபோதும், அவரால் பழையபடியே விளையாட முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மாரியப்பனின் செயலால் இந்தியா பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக சிறப்பான திறமையை மாரியப்பன் வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல், வெண்கலப் பதக்கம் வென்ற ஷரத் குமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில் 2வது முறையாக பதக்கம் வென்றுள்ள மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நட்சத்திரம் என்றும் மாரியப்பனுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.