ஆப்கனில் தலிபான் இயக்கத்தினர் கிரிக்கெட் விளையாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு போர் கடந்த 2 வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. அதில், தலிபான்கள் அரசு படையை வீழ்த்தி ஆப்கனை கைப்பற்றினர். இதையடுத்து ஊடகங்களுக்கு தலிபான்கள் அளித்த பேட்டியில் பல்வேறு உறுதி மொழிகளை அளித்தனர். அதன்படி, ஆப்கானிஸ்தான் நிச்சயம் கிரிக்கெட் தடை செய்யப்படாது என்றும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி, ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக கைப்பற்றியுள்ள தலிபான்கள், இந்த முறை நேர்மறையான மனநிலையுடன் வந்திருக்கிறார்கள் என்றும், பல்வேறு துறைகளில் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிக்கிறார்கள், என்றும் கூறியுள்ளார். மேலும், கிரிக்கெட் மீது தலிபான்கள் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என நினைக்கிறேன்” என்றும் அப்ரிடி கூறியிருக்கிறார். அவரது இந்த பேட்டிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும் எதிர்த்தும் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







