’சிறை’ படக்குழுவினரை வாழ்த்திய மாரி செல்வராஜ்…!

இயக்குநர் மாரி செல்வராஜ் ’சிறை’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ’சிறை’ . 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் சிறை படக்குழுவினரை பாராட்டியுள்ளர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும்.

அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது. தனது முதல் படத்திலே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்‌ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன் . இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.