’மாமன்னன்’ திரைப்பட வெற்றி விழாவில் படத்தின் ஒற்றைவரி வசனத்தை பேசி இயக்குனர் மாரி செல்வராஜ் உரையை முடித்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் பாராட்டினர்.
அதேபோல இந்திய அளவில் மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும், அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1.2 கோடி மக்கள் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டிருந்தார்கள்.
இப்படம் வெளியாகி 50 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டதை படக்குழு சென்னையில் உள்ள திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவில் இயக்குனர், கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், உதயநிதிஸ்டாலின் பறக்கும் பன்றிக்குட்டியுடன் உள்ளது போன்ற சிறிய சிலை பரிசாக வழங்கப்பட்டது.
இந்த விழா மேடையில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது:
நான் பாடிக் கொண்டிருப்பது பழைய பாடலாக இருக்கலாம். அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன். என படத்தில் வடிவேலு பேசும் வசனத்தை பேசி ஒற்றைவரியில் உரையை முடித்துக் கொண்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்.







